லண்டனில் தீயில் சிக்கி பலியான இலங்கை தமிழ் குடும்பம்! விசாரணையில் வெளியான தகவல் (VIDEO)
லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி சமுகத்திடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில்,குறித்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயை எச்சரிக்கும் கருவி தொழிற்படாமையே இந்த அனர்த்ததிற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,எங்கள் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, இந்த பயங்கரமான சம்பவத்திற்கான காரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள லண்டன் தீயணைப்புப் படையிலுள்ள எங்கள் சக ஊழியர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த ஆரம்ப கட்டங்களில், தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியது என்று நாங்கள் நம்பவில்லை என்றும் துப்பறியும் தலைமைக் கண்காணிப்பாளர் தமது விசாரணை தொடர்பான விளக்கத்தினையளித்துள்ளார்.
யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் நேற்றைய தினம் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.இந்நிலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்ட கரடி பொம்மையின் புகைப்படமும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
லண்டனில் கோர சம்பவம் - இலங்கை தமிழ் குடும்பம் உயிரிழப்பு
மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய வீடு! - லண்டனில் இலங்கை குடும்பம் தீயில் கருகி பலி