தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களின் நிபந்தனைகளை மீறினால்.. நளிந்த ஜயதிஸ்ஸ கடும் எச்சரிக்கை
அரசாங்கம் வழங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் நிபந்தனைக்குட்பட்டவை அவற்றை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக எச்சரித்துள்ளார்.
நேற்றையதினம்(29) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
முக்கிய பொறுப்பு
இலங்கையில் அனைத்து தொலைக்காட்சி சேவை உரிமங்களும் தற்காலிக அடிப்படையில் வழங்கப்படுகின்றன எனவே,உரிமம் வழங்கும் போது விதிக்கப்படும் நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை வெளியிடும் போது அதன் துல்லியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஊடகப் பணியாளர்களின் முக்கிய பொறுப்பு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நிலையில் தொலைக்காட்சியின் தாக்கம் மிகப் பெரியதாக இருப்பதாக கூறிய அவர், பத்திரிகைகளில் வெளியாகும் செய்தித் தலைப்புகள் மற்றும் கட்டுரைகள் தொலைக்காட்சி செய்திகளில் வாசிக்கப்படுவதாகவும், சில செய்தி வாசிப்பாளர்கள் அதில் தங்களது தனிப்பட்ட கருத்துகளையும் விளக்கங்களையும் சேர்ப்பது கவலைக்கிடமான நிலை எனவும் தெரிவித்துள்ளார்.
உரிமம் ரத்து
இவ்வாறான செயற்பாடுகள், மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். தவறான எண்கள், தவறான தகவல்கள் அல்லது வழிதவறிய கருத்துகள் வெளியிடப்பட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையானவை.

பொதுச் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பப்பட்டால், அந்த சேவையின் உரிமத்தை ரத்து செய்ய அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.
உரிமம் ரத்து செய்வதற்கு முன், திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வழங்கப்படும் என்றும், அவற்றை பின்பற்றுவது கட்டாயம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.