நாடு இருளில் மூழ்கக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை
நாடு இருளில் மூழ்கக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலக்கரி கப்பல்கள் கால தாமதமாவதன் காரணமாக எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் மாத நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் மின் விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய காலம் தாழ்த்தப்படுவதால் பல்வேறு துறைகளில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் பேசப்படும் போது அதன் தரம் குறித்து பலர் பேசுகின்ற போதிலும் உரிய நேரத்தில் நிலக்கரி விநியோகம் செய்யப்படாவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நிலக்கரி கப்பல்கள் உரிய நேரத்தில் வந்தடையாவிட்டால் மின் தடை ஏற்படும் அல்லது ஒரு அலகிற்கான மின் மின்சாரம் 90 ரூபாய் விட அதிகமாகக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பிரதான மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் ஸ்தம்பித்தால் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது மட்டுமின்றி நாடு இருளில் மூழ்கக் கூடிய அபாய நிலை காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்த ஆபத்தான நிலை குறித்து கவனம் செலுத்தி, அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு மற்றும் அவற்றை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயல்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தாத காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் மின்விநியோகத்திற்கு பாதிப்புகள் ஏற்படலாம் என உதய கம்மன்பில மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.