பிரிட்டனுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட இலங்கை அகதி ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு!
பிரிட்டனால் ஆபிரிக்க நாடான எஸ்வாட்டினிக்கு (Eswatini) வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 35 வயதான அகதி கிஷாந்த் பெரமல்யா அங்கு சென்ற சில மாதங்களுக்குப் பின்னர் கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் மீட்கப்பட்ட அவர் உள்ளிட்ட இலங்கைத் தஞ்சக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது பாதுகாப்பானதல்ல எனக் கருதப்பட்டதால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
கடுமையான மனநலப் பாதிப்புகள்
எனினும், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் தண்டனை பெற்றிருந்ததால், 2024ஆம் ஆண்டு ஏனைய இலங்கையர்களுடன் அவர் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் 20க்கும் மேற்பட்ட நாடுகளிடம் அவரை ஏற்றுக்கொள்ளுமாறு பிரிட்டன் கோரிக்கை விடுத்தபோதும் இணக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலைத்தீவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கிருந்து எஸ்வாட்டினிக்கு அனுப்பப்பட்டார்.
பிரிட்டன் மற்றும் எஸ்வாட்டினி அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தின்படி, அவரது தங்குமிடம், மருத்துவம் மற்றும் ஏனைய அடிப்படைச் செலவுகளை மூன்று ஆண்டுகள் வரை பிரிட்டன் ஏற்கவிருந்தது.
எனினும், கடுமையான மனநலப் பாதிப்புகள் மற்றும் ஏற்கனவே பலமுறை தற்கொலைக்கு முயன்ற வரலாறு கொண்டிருந்த அவர், எஸ்வாட்டினியில் தனிமைப்படுத்தப்பட்ட விருந்தினர் விடுதியில் தங்கவைக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளதுடன், அகதிகளை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பும் நடைமுறையில் மனித உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான கேள்விகளும் எழுந்துள்ளன.
எஸ்வாட்டினியின் சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நிலையில், இவ்வாறானவர்களை ஏற்றுக்கொள்வது நாட்டின் வளங்களுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.