ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! 14 நாடுகள் இலக்கு – பட்டியலில் இல்லாத இலங்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சீனா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராகப் புதிய இறக்குமதி வரிகளை முன்மொழிந்துள்ளது.
உலகச் சந்தையில் நிலவும் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தி மற்றும் அரசாங்கங்களின் மானிய ஆதரவால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இந்த நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.
புதிய இறக்குமதி வரி
இதன்படி, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், கம்போடியா, சுவிட்சர்லாந்து, தாய்வான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வர்த்தகக் கூட்டாளிகள் இந்த நடவடிக்கையின் இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள வரி விகிதங்களில் சீனாவுக்கான வரி அதிகபட்சமாக 20 சதவீதமாக உள்ளது. ஏனைய நாடுகளுக்கான வரி விகிதங்கள் அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள வரம்புகளுக்கு அமைவாகத் தீர்மானிக்கப்படவுள்ளன.

குறிப்பாக, சீனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பதற்றத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னரும் ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் சீனப் பொருட்களுக்கு சுமார் 25 சதவீதம் வரையிலான வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போதைய முன்மொழிவு அந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா மற்றுமொரு வர்த்தக விசாரணையின் அடிப்படையில் சுமார் 60 பொருளாதாரங்களின் மீது 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான வரிகளை விதித்திருந்தது.
கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடுப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே அந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை
இந்தப் பின்னணியில் இலங்கையின் நிலையும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தொழில்துறை உற்பத்தி தொடர்பான 14 வர்த்தகக் கூட்டாளிகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை.
எனினும், கடந்த ஜூலை மாதம் முன்னெடுக்கப்பட்ட கட்டாய உழைப்பு தொடர்பான வர்த்தக விசாரணையின் அடிப்படையில் இலங்கைப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.
இதனால், புதிய வரி நடவடிக்கையில் இலங்கை இடம்பெறாவிட்டாலும், அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் ஏற்கனவே மற்றுமொரு வரி நடவடிக்கையின் கீழ் வருகின்றன.

மேலும், அமெரிக்க உயர் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தின் பரந்தளவிலான உலகளாவிய வரி விதிப்புகளைச் செல்லுபடியற்றதாக்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய சட்ட அடிப்படையின் கீழ் வர்த்தகக் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
எனினும், இந்தப் புதிய வரிகள் உடனடியாக நடைமுறைக்கு வராது. பொதுமக்களின் கருத்தறியும் நடைமுறை மற்றும் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னரே அவை நடுமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதனால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைமுறைப்படுத்தல் தாமதமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தப் புதிய வர்த்தக நடவடிக்கை, ஆசிய நாடுகளின் ஏற்றுமதித் துறை, சர்வதேச வர்த்தக உறவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் சர்வதேச பொருளாதாரத் துறையினர் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan