இலங்கையின் வர்த்தக கணக்கில் மொத்தப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் வர்த்தக கணக்கில் மொத்தப் பற்றாக்குறை கடந்த வருடத்திற்குள் 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் வெளித்துறை செயற்பாடுகள் குறித்த தமது அறிக்கையிலேயே மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது 2010ஆம் ஆண்டிலிருந்து பதிவான மிகக் குறைந்த அளவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய ஏற்றுமதியில் அதிகரிப்பு
அத்துடன், 2023 டிசம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 6.2 வீதம் குறைந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அதே நேரத்தில், விவசாய ஏற்றுமதியில் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமும் 2022 உடன் ஒப்பிடுகையில் 9.1 வீதம் குறைந்து 11.91 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
அதேவேளை, கட்டுப்பாடுகள் மற்றும் தளர்த்தலுக்கு மத்தியிலும் முக்கியமாக முதலீட்டு பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதியால் இறக்குமதியும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்ததை காட்டிலும் 2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இறக்குமதி செலவினம் 8.1 வீதத்தால் குறைந்து 16.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.
சுற்றுலாத்துறை வருவாய்
இதற்கிடையில், புலம்பெயர் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் 2023 நவம்பரில் 537 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட அதேவேளை, 2023 டிசம்பரில் 570 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஆனால், 2022 டிசம்பரில் இதே எண்ணிக்கை 476 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதுடன் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 297,656 ஆக பதிவாகியுள்ளன.
அத்தோடு, நவம்பர் 2023 இல் சுற்றுலாத்துறையின் வருவாய் 127 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
மொத்தத்தில், 2023இல் சுற்றுலாத்துறையின் வருவாய் 2.068 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 2022 இல் வருவாயான 1.136 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது ஒரு வருடத்தில் 82வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |