சிறீதரன்-சுமந்திரனுடன் தனித்தனியாக பேசினேன்! கம்பபாரதி ஜெயராஜ் வெளிப்படுத்தும் உண்மைகள்
சிறீதரன் மற்றும் சுமந்திரனுடன் தனித்தனியாக பேசியதாகவும் அவ்விருவரும் சமாதான தீர்வொன்றினைக் காணும் விருப்பத்துடனேயே இருக்கிறார்கள் எனவும் கம்பபாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் கூறியுள்ளார்.
அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
1. உரலார் கேள்வி :- என்னாயிற்று உங்கள் சமாதான முயற்சி? அடுத்த தேர்தலில் நீங்களும் ஒரு ‘சீற்றை’ எதிர்பார்ப்பதாக சொல்லிக் கொள்கிறார்களே அது உண்மையா?
உலக்கையார் பதில் :- சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகிய இருவரும் ‘உரலார் கேள்வி’ பதிலைப் படித்து விட்டு என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அவ்விருவரும் சமாதானத் தீர்வொன்றினைக் காணும் விருப்பத்துடனேயே இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
சில அழுத்தங்கள்
பேசிப்பார்த்ததில் அவ்விருவருக்கும் பின்னால் சில அழுத்தங்கள் இருப்பதை உணர முடிந்தது. அதனால் நாம் நினைக்கிற அளவு இப்பிரச்சினையை வேகமாய்த்தீர்க்க முடியும் என்று தோன்றவில்லை.
முதலில் சுமந்திரனும் ஸ்ரீதரனும் மற்றவர்களால் தமக்கு இடப்பட்டிருக்கும் எல்லைக் கோடுகளை உடைத்துக் கொண்டு வெளிவரும் துணிவைப் பெற வேண்டும். அதற்கு முதலில் ஒருவரையொருவர் முழுமையாய் நம்பவேண்டும். மற்ற எவரையும் நம்பாமல் ‘நாமே இப்பிரச்சினையைக் கடப்போம்’ என முடிவு செய்து, செயலாற்ற இருவரும் துணிய வேண்டும்.
மற்றவர்கள் இவர்களுக்கு இட்டிருப்பது உதறி அறுத்தெறியக்கூடிய வெறும் நூல் வேலிகள் தான். அந்த நூல் வேலியை, கடக்க முடியாத மதில்சுவர் என நினைந்து, அதற்குள் இவர்கள் அடங்கிப் போவார்களே ஆனால், நிச்சயம் வரலாற்றுத் தோல்வியை அடைவார்கள்.
பதவி சார்ந்த சில விருப்பங்கள்
இவர்களின் பிடிவாதத்தால் நிகழப் போகும் பழி ஒருக்காலும் இவர்களை விட்டு அகலாது. இருவருக்கும் பதவி சார்ந்த சில விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதையுணர்ந்து சில விட்டுக் கொடுப்புகள் மூலம் ஒருவரையொருவர் திருப்தி செய்ய முயல வேண்டும்.
இவ்விட்டுக் கொடுப்புக்களால் ‘அவர் தோற்றார்’ ‘இவர் தோற்றார்’ என்ற பேச்சேவராமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இல்லாவிட்டால், தன்மானத்தூண்டுதல் எழுந்து மீண்டும் பகையாய் வெடிக்கும்.
வள்ளுவர் ஒரு நல்ல தலைவனின் இலக்கணங்களை வகுத்துக் காட்டுகையில், ‘அஞ்சாமை’ ‘ துணிவுடமை’ எனும் இரண்டு பண்புகளின் அவசியத்தை வலியுறுத்துகிறார். முக்கியமான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது, ஒரு தலைவனுக்கு, இவ்விரண்டு பண்புகளும் அவசியம். சரியென்று தான் முடிவு செய்து விட்டால் எவருக்கும் அஞ்சாமல் அம்முடிவைச் செயல்படுத்தும் ஆண்மையுடையவனே சிறந்த தலைவனாவான். அந்த ஆண்மையே, துணிவுடமை என்று வள்ளுவரால் குறிக்கப்படுகிறது.
இவையெல்லாம் நடக்க, முதலில் இவ்விருவரும் ஒழிவு மறைவின்றி மனந்திறந்து ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். பேசி தெளிவடைந்த பின்னர், ஒருவர் கையை மற்றவர் இறுகப்பற்றி உயர்த்திக் காட்டினால் போதும், அனைத்துப் பிரச்சினைகளும் அத்தோடு அடங்கிப்போகும்.
என்னால் முடிந்தவரை அவ்விருவருக்கும் இவ் உண்மைகளை உணர்த்தி இருக்கிறேன். சம்மதித்துச் சென்றார்கள். இதுவரை தொடர் நடவடிக்ககைகளைக் காண முடியவில்லை. ஒரு வேளை அவர்கள், ‘இவர் வெறும் இலக்கியவாதி தானே, இவருக்கென்ன அரசியல் தெரியப் போகிறது’ என்று நினைத்தாலும் நினைத்திருக்கலாம்.
ஒரு காரியத்தை எப்படித் தொடங்கி எப்படி வழி நடத்தி எப்படி முடித்து வைக்கவேண்டும். என்பதை ஒரு இலக்கியவாதியை விட சிறப்பாக எவராலும் செய்து விட முடியாதென்பது உறுதி. இவர்களும் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சார்பாக, பட்டம் பெற்றவர்களையும் பதவிகளில் உள்ளவர்களையும் தான் நம்பப் போகிறார்கள் என்றால், எனக்கு அதில் ஆட்சேபனை ஏதுமில்லை.
இனத்தின் உயர்வு
‘ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமானால்’ எனக்கும் சந்தோஷம் தான்! நான் சரியான பாதையொன்றைக் காட்டியிருக்கிறேன். அதில் நடக்க வேண்டியது இனி அவர்களின் பொறுப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.
கடைசியாக, தேர்தலில் ‘சீற்’ எதிர்பார்ப்பதாக ஒரு வெடியைக் கொழுத்திப் போட்டிருக்கிறீர்கள். இனத்தின் உயர்வு பற்றிய முயற்சிகளில் ஈடுபடும் போது, எனது உயர்வு நோக்கி பேரம் பேசும் கீழ்மைக்குணம் ஒருக்காலும் என்னிடம் இல்லை.
அது தவிர இறைவன் இவ்வுலகில், மற்றவர்களால் கிட்டவும் நெருங்க முடியாத, போட்டிக்கே ஆள் இல்லாத, புகழ் கொண்ட ஓர் ‘சீற்றை’ எனக்கென்று தந்திருக்கிறான். அப்பிடியிருக்க நீங்கள் சொன்ன நிலையில்லாத ‘சீற்றுகளுக்கு’ ஆசைப்பட நான் ஒன்றும் முட்டாளில்லை.
சல்லடையார் சலிப்பு -
வேண்டாமை என்னும் விழுச் செல்வம் வாரிதியாரிட்ட நிறைய இருக்குது போல.