மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்
தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5 குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5) மீட்டு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அதிகாலை வழக்கமான கடல் ரோந்துப் பணியின் போது, முதற்கட்டமாக நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவை கடற்படையினர் கண்டறிந்த நிலையில் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகள் உடனடியாக வழங்கப்பட்டன.
மனிதக் கடத்தல்
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில் தவித்துக் கொண்டிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் என மேலும் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக (5 குழந்தைகள், 4 பெண்கள், 2 ஆண்கள்) உயர்ந்துள்ளது.

மேலும் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியே பயணம் செய்ததும், சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் கும்பலால் மணல் திட்டில் கைவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21