இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் விசேட திட்டம்
இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவகம் (SLFEA) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நிறுவகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி,
இலங்கைத் தொழிலாளர்கள்
கட்டுமானத் துறை, திறன் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் (IT), பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் திறன் வாய்ந்த, ஓரளவு திறன் வாய்ந்த மற்றும் தொழில்முறைத் தொழிலாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்புகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் தேவையான ஜப்பானிய மொழித் திறனைக் கொண்டிருந்தால், ஜப்பானில் உள்ள லொரி ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
இதேவேளை சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதும், திறமையான தொழிலாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதுமே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் சந்தை விலையை விடக் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக, முகமையின் சார்பில் விசேட விமான டிக்கெட் விற்பனை மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கமைய இவ்வாய்ப்புகளைப் பெற விரும்புவோர் மேலதிக தகவல்களைப் பெறவும் நேரடியாக விண்ணப்பிக்கவும் நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.slfea.lk-ஐப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.