இலங்கையின் இருதரப்பு கடன்தாரர்களுக்கு இந்தியாவிடமிருந்து அறிவிப்பு
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து இருதரப்பு கடனாளர்களும் அந்தக் கடனை மறுசீரமைப்பதில் தீவிரமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(20.01.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து இருதரப்பு கடனாளர்களும் உதவ வேண்டும்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து இருதரப்பு கடனாளர்களும் உதவ வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மற்றவர்கள் செய்யும் வரை காத்திருக்காமல் நாங்கள் சரியானது என நம்புவதைச் செய்ய முடிவு செய்தோம்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு நாங்கள் நிதி உத்தரவாதம் அளித்தோம், இது இலங்கையை முன்னேற்றுவதற்கு எளிதாக்கும். இது இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்தும் மற்றும் அனைத்து இருதரப்பு கடன் வழங்குனர்களுடனும் சமமாக கையாள்வதில் எங்கள் நம்பிக்கை உள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் உதவியுள்ளது.
மக்களிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்
அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அது குறித்து ஜனாதிபதிஎன்ன நினைக்கின்றார் என என்னிடம் கூறினார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது முக்கியம் என நான் அவரிடம் தெரிவித்தேன்.
இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சியின் முக்கியத்துவத்தையும், இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன்களை கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் கூறினேன்.”என தெரிவித்துள்ளார்.