நள்ளிரவு வரை ஏழு அமைச்சர்களுடன் பேச்சு நடத்திய இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி உட்பட ஏழு அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தைகள்
இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பிற்பகல் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவர்களுடன் நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி நேற்று நள்ளிரவு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.