வாகன இறக்குமதியால் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பா.. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தற்போது உள்நாட்டு ரீதியில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 330 ரூபா அளவில் மிகவும் ஸ்திரமடைந்துள்ளது எனவும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடு மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாக வெளியாகி வரும் செய்திகளை முற்றாக நிராகரித்து, கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையையும், தற்போதைய நேர்மறையான சூழ்நிலையையும் ஒப்பிட்டுப் பேச முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை..
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில், கடந்த 2025 ஆம் ஆண்டானது இலங்கை வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆண்டாகப் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைக் காலமாக உள்நாட்டு நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட தற்காலிக ஏற்ற இறக்கங்கள் குறித்துப் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. கடல்சார் பதற்றங்களால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்தமையே இந்தத் தற்காலிக மாற்றத்துக்குக் காரணமாகும், மாறாக உள்நாட்டுக் கொள்கை முகாமைத்துவக் குறைபாடு அல்ல" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் வதந்திகளைப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ வன்மையாக மறுத்தார்.

கடந்த 15ஆம் திகதி வரை 1,782 வாகனங்கள் மட்டுமே உத்தியோகபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தரவுகளை முன்வைத்து அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வரும் நாள்களில் இலங்கைக்குக் கிடைக்கவுள்ள சர்வதேச நிதி உதவிகள் குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த அனைத்துச் சர்வதேச நிதி ஓட்டங்களும் திட்டமிட்டபடி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளதால், நாட்டின் டொலர் கையிருப்பு மற்றும் பொருளாதாரப் பாதையின் ஸ்திரத்தன்மை குறித்துப் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.