இலங்கையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவது எவ்வாறு...!
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் செயன்முறை தொடர்ச்சியான படிமுறைகளை கொண்ட ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது.
நீங்கள் வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் ஒருவராகவோ அல்லது அதற்காக ஒருவரை வழிநடுத்துபவராகவோ இருப்பின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.
தகுதி மற்றும் ஆவணங்கள்
வயது எல்லை : நீங்கள் கட்டாயமாக 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
அடையாள ஆவணம்: தேசிய அடையாள அட்டை(NIC) மற்றும் தேசிய அடையாள எண்ணை உள்ளடக்கிய கடவுச்சீட்டு ஆகிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அத்துடன், உங்களின் பிறப்புச் சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
படிமுறை 1 - மருத்துவ பரிசோதனை
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால்(NTMI) வழங்கப்படும் மருத்துவ சான்றிதழ் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு முக்கியமானதாகும்.
முக்கிய NTMI மையங்கள் வெரஹெர, நுகேகொட, குருநாகல், கண்டி, காலி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இதற்கான முன்பதிவுகளை ஒன்லைனில் செய்துக்கொள்ள முடியும்.
ஒன்லைனில் முன்பதிவு செய்ய 'Link'ஐ அழுத்தி உங்களின் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்.
அத்துடன், நீண்ட வரிசைகளை தவிர்ப்பதற்கு முன்கூட்டியே NTMI மையங்களுக்கு வருவது நல்லது.
படிமுறை 2 - மோட்டார் போக்குவரத்துத் துறையில்(DMT) பதிவு செய்தல்
உங்கள் மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்(DMT) தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
குறித்த செயன்முறைக்கு 2-5 மணிநேரம் வரையான காலம் செலவிடப்படலாம்.
பதிவு செய்யும் செயன்முறை முடிந்ததும் உங்கள் பரீட்சைக்கான திகதியைப் பெற முடியும்.
படிமுறை 3 - எழுத்துப் பரீட்சை மற்றும் பழகுபவர்களின் அனுமதிப்பத்திரம்
எழுத்துப் பரீட்சை போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை அடையாளங்கள் பற்றிய உங்களின் அறிவை மதிப்பிடும்.
எழுத்துப் பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் உயர்ந்தபட்ச 18 மாதங்களுக்கு என ஒரு பழகுபவர்களின் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.
நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், மூன்று மாதங்களில் நடைமுறை தேர்வுக்கான(Trial/Practical exam) திகதி வழங்கப்படும்.
நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், குறித்த திகதியைப் பெற 18 வயது வரும் வரை காத்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், பழகுபவர்களின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர் வாகனம் செலுத்திப் பழகலாம்.
படிமுறை 4: நடைமுறைத் தேர்வு
Trial அல்லது Practical exam என அழைக்கப்படும் நடைமுறைத் தேர்வில் நீங்கள் வாகனத்தை செலுத்திக் காட்டி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
சாலையில் வாகனத்தை ஓட்டி காட்டுவதோடு ரிவர்ஸ் பார்க்கிங்(Reverse parking) போன்றவற்றையும் செய்துக் காட்ட வேண்டும்.
படிமுறை 5: சாரதி அனுமதி பத்திரத்தை பெறுதல்
நடைமுறைத் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் சாரதி அனுமதி பத்திரத்தை பெற உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.
முதலாவதாக கூடுதல் கட்டணத்தை செலுத்தி அதே நாளில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
மற்றொன்று, தபால் மூலமாக சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையான காலம் எடுக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை வெற்றிகரமாகப் பெறலாம்.
பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவதுடன் எப்போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
