பாரியளவில் பாதிப்பிற்கு உள்ளாகும் நோயாளர்கள்: சுகாதார அமைச்சின் அசமந்தபோக்கு
ஹம்பாந்தோட்டை பகுதியில் 10 விசேட வைத்தியர்கள் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஜயந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணரும் ஓய்வு பெற்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் இதன்போது தெரிவித்தனர்.
சத்திரசிகிச்சை நோயாளர்கள் பாதிப்பு
மயக்க மருந்து நிபுணரின் பற்றாக்குறையை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு தவறியுள்ளதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் சத்திரசிகிச்சைக்கு செல்லும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க நேரிடும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு விளக்கம்
மேலும், இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
இதில், 600 இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரச்சினை ஓரளவு நிவர்த்திக்கப்படும்
எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |