விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இன்று(28.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் உரிய தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை விடுமுறை
மேலும், கல்வி பொதுதராதர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உத்தியோகபூர்வ விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் திகதி பாடசாலை விடுமுறையுடன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதால், ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க ஓய்வு அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அந்த கோரிக்கையை ஏற்று கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் கடந்த 18ஆம் திகதி தொடங்கிய விடைத்தாள்கள் மதிப்பீடு 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |