அமெரிக்கத் தூதுவருக்கு தென்னாபிரிக்கா மீண்டும் அழைப்பாணை: இராஜதந்திர எல்லைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு
தென்னாபிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் லியோ ப்ரெண்ட் போஸெல்ஸின் இராஜதந்திரத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் கோரி தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சு அவரைப் பணிமனைக்கு அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களுக்குள் அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு அழைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வது இது மூன்றாவது தடவையாகும் என தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு
தென்னாபிரிக்காவில் வெள்ளையின மக்கள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலும், நாட்டின் நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தூதுவர் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது நாட்டின் இறைமை மதிக்கப்பட வேண்டும் என்றும், வரலாற்று ரீதியான அநீதிகளைச் சரிசெய்யும் உள்நாட்டு முன்னுரிமைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் செய்யப்பட மாட்டாது என்றும் தென்னாபிரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ள போதிலும், இருதரப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தூதரக மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.