விவசாயிகளுக்கு தொடர் அனுமதி மறுப்பு - கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
அக்கரைப்பற்று - வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர் திட்டமிட்ட வகையில் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வட்டமடு விவசாயிகள் சம்மேளனத்தினால் விசேட முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாகத் தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த காணிகள், விவசாயிகளாகிய தமக்குத் தெரியப்படுத்தப்படாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு திணைக்களத்தினால் வர்த்தமானி மூலம் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசனம் தெரிவிக்கும் விவசாயிகள்
முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விவசாயிகள்,
2015 ஆம் ஆண்டு பெரும்போகம் வரை நாங்கள் இந்த காணிகளில் விவசாயம் செய்து வந்தோம். அதன் பின்னர் விவசாய ஆரம்பக் கூட்டங்களை நடத்துவதற்கும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் திருக்கோவில் பிரதேச செயலாளர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றார்.

இந்த காணிகள் பக்குமட்டியா வனப்பகுதிக்குள் அடங்குவதாகக் காரணம் கூறப்படுகின்றது. இருப்பினும், அதே பக்குமட்டியா மற்றும் திம்பிரிக்கொள்ள வனப் எல்லைக்குள் அமைந்துள்ள சாகாமம், பெரியதிலாவ, முரானபட்டி, பொத்தான, பழையவட்ட, கொக்குளுவ, டிப்போமடு மற்றும் கஞ்சுடிச்சாறு போன்ற ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வேளாண்மை செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
பாரபட்சம் பார்க்கும் அரச அதிகாரிகள்
அந்த பகுதிகளில் 100 வீதம் தமிழ் விவசாயிகள் உள்ளதால் அவர்களுக்கு அனுமதி வழங்கும் பிரதேச செயலாளர், 95 வீதம் முஸ்லிம் விவசாயிகள் நிலத்தைக் கொண்டுள்ள வட்டமடு பிரதேசத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கின்றார்.
இந்த பிரதேசத்தில் வாழும் ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் இந்த காணிகளில் மீண்டும் சுதந்திரமாகச் சென்று விவசாயம் செய்ய அரசு மற்றும் அனைத்துத் தரப்பினரும் நீதி பெற்றுத்தர வேண்டும்.

அதேவேளை, ஒரே பிரதேச செயலகப் பிரிவில் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்களில் ஒரு சாராரை நீதியாகவும், மறுசாராரைப் பாரபட்சமாகவும் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எதிர்வரும் 2026/2027 பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக ஏனைய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று, வட்டமடு விவசாயிகளுக்கும் விவசாய ஆரம்பக் கூட்டங்களை நடத்தி வேளாண்மை செய்ய உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளரும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri