அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் குறித்து தென்னாப்பிரிக்கா கவலை வெளியீடு!
தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவினால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு, தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்துச் சில தீவிரவாதக் குழுக்களால் பரப்பப்படும் தவறான கருத்துக்களையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் சவால்களைத் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அன்றி, இராஜதந்திர ரீதியிலான சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசா கட்டுப்பாடுகள்
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இனச் சமத்துவச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்குள்ள வெள்ளைப்பினச் சிறுபான்மையினருக்கு எதிராக இனரீதியான அடக்குமுறைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வருகிறார்.

இந்நிலையில், தற்போதைய விசா கட்டுப்பாடுகள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே என்றும், அடுத்துவரும் நாட்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.