தையிட்டிப் பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்:இளங்குமரன் எம்.பி விசனம்
எங்களுடைய அரசாங்கம் தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.
தையிட்டி பகுதியில் நேற்று(3.5.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது.
காணி அளவீடு
தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்கும் முகமாக மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எமது அரசாங்கத்தால் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய தினம் மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் காரணமாக காணிகளை அளவீடு செய்ய முடியாமல் போனது. ஆனாலும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மக்களுக்கு மீள நம்பிக்கையளித்து மீளக் காணிகளை அளப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர். எனினும் அது தடைப்பட்டுள்ளது.
விகாரைப் பிரச்சினை
தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழ உள்ள காணிகளை நில அளவை செய்து மக்களிடம் ஒப்படைப்பதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம். சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் நில அளவைகளை மேற்கொள்ளவில்லை.

சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் தமிழ் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பார்கள்.
சிலர் தங்களுடைய அரசியலுக்காக இந்த விகாரைப் பிரச்சினையை தீராத ஒரு பிரச்சினையாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.
வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை
காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.

பவாணி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்.வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.
விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.
மேலதிக தகவல்-தீபன்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026