சமூக ஊடகங்களினால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை
சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறுவர்களின் கணிதம், மொழி மற்றும் வாசிப்புத் திறன்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் சிரேஷ்ட கல்வியியலாளரான பேராசிரியர் டியூடர் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 35 இலட்சம் (3.5 மில்லியன்) பேரை உள்ளடக்கிப் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும் சிறுவர்களின் கல்வித் திறன் வீழ்ச்சிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஹோமாகமவில் நடைபெற்ற ஊடக அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே பேராசிரியர் டியூடர் வீரசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
சிறுவர்கள் மீது சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கரிசனை அதிகரித்துள்ளதால், அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாடசாலைகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் டிஜிட்டல் தளங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சமூக ஊடகங்களின் அதிவேக விரிவாக்கத்தினால் ஏற்படும் சவால்களுக்கு இலங்கை இன்னும் போதியளவு பதிலளிக்கவில்லை எனவும், இது குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.
டிஜிட்டல் தளங்கள் என்பவை வெறுமனே தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு சாதனங்களாக மட்டும் நின்றுவிடாமல், மனித நடத்தை மற்றும் ஆளுமை விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சக்திவாய்ந்த காரணிகளாக உருவெடுத்துள்ளதாகப் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
எனவே, டிஜிட்டல் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஊடக அறிவை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri