ஹட்டன் முதல் யாழ்ப்பாணம் வரையான இ.போ.ச பேருந்து சேவை ஆரம்பம்
ஹட்டன் முதல் யாழ்ப்பாணம் வரையான இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான நேரடி பேருந்து சேவை, நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து இன்று(05.11.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேச மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு அமைய, ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இந்தச் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு, ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித பண்டார தலைமையில் நடைபெற்றதுடன், ஹட்டன் – டிக்கோய நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் அழுத்தம்
ஹட்டன் மற்றும் காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள் இணைந்து இந்தப் பஸ் சேவையை முன்னெடுக்கின்றன.

இதன்படி, தினமும் மாலை 3.45 மணிக்கு ஹட்டனிலிருந்து புறப்படும் பேருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் வகையில் சேவை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
எவ்வித தடைகளுக்கும் இடமளிக்காமல், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தச் சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் கோரிக்கைக்கு தீர்வு
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பெருமளவிலான மாணவர்களுக்கு இந்தப் புதிய சேவை பெரும் பயனளிக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தனியார் பேருந்து சேவைகளை மாத்திரம் நம்பியிருக்க வேண்டிய நிலை காணப்பட்ட நிலையில், தற்போது அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தங்களுக்குப் பாதுகாப்பானதும் நம்பிக்கையானதுமான பயண வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் இந்தச் சேவையை ஆரம்பித்த அரசாங்கத்திற்கும், இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.




மேலதிக தகவல் - திவாகரன்