உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சுரேஷ் சலே! நீதிமன்றில் CID அதிர்ச்சித் தகவல்
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே மற்றும் மேலும் மூன்று பேருக்குத் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நீதிபதி பசன் அமரசேகர முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரிவான விசாரணைகள்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள், முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேயின் திட்டமிட்ட நடவடிக்கையின் அடிப்படையிலும், மேலும் மூவரின் மறைமுகமான அறிவுடன் முன்னெடுக்கப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் முன்னாள் புலனாய்வுப் பிரதானி சுரேஷ் சாலே, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான பிரசாத் ரணசிங்க மற்றும் நிஷாந்த சொய்சா ஆகியோரிடமிருந்தும், அசாத் மௌலானா என்பவரிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக CID நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், தாக்குதல்களுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் தாக்குதல்களின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக CID நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய யாசிக் பாவா என்பவரும் சில பொலிஸ் அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சுரேஷ் சலே உடல்நலக் குறைவு
கடந்த ஜூன் 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சில இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடைகள் பெறப்பட்டிருந்ததாகவும் CID தெரிவித்துள்ளது.
எனினும், சுரேஷ் சலே உடல்நலக் குறைவு காரணமாக நான்கு மாதங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒக்டோபர் 6ஆம் திகதி அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டு சுரேஷ் சலே மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தமை தொடர்பான கட்டணப் பதிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.