பலஸ்தீன மக்களின் இயற்கை வள உரிமைக்கு இலங்கை ஆதரவு: அமெரிக்கா- இஸ்ரேல் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை இரண்டாவது குழுவில், பலஸ்தீன மக்களின் இயற்கை வளங்கள் மீதான நிரந்தர இறையாண்மை உரிமையை உறுதிப்படுத்தும் தீர்மானத்திற்கு இலங்கை உள்ளிட்ட 151 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில், 7 நாடுகள் எதிராகவும், 11 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் இருந்தன.
அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, மைக்ரோனேஷியா, நவுரு, பலாவ் மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
இழப்பீடு
இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகள் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பலஸ்தீன மக்கள் கட்டுப்படுத்தி, அவற்றின் பயன்களைப் பெறுவதற்கான உரிமையை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் மற்றும் அழித்தல் தொடர்பான நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட இழப்புகளுக்குப் பலஸ்தீன மக்கள் இழப்பீடு கோருவதற்கான உரிமை உள்ளதாகவும், குறித்த தீர்மானம் குறிப்பிடுகிறது.
மக்களின் உரிமைகள்
குழு மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம், இறுதி பரிசீலனைக்காக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது சட்டரீதியாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதல்ல என்றாலும், பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri