ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த சினோபெக் நிறுவனம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய் விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு, சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப் பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படும் மசகு எண்ணெயை விட ரஷ்யாவின் எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இதன் மூலம் சீனாவில் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் சீராகப் பேணப்பட்டு வருவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசகு எண்ணெய் இறக்குமதி
அதற்கமைய, ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கு ரஷ்யாவின் 'இஎஸ் பி ஓ' (ESPO) ரக மசகு எண்ணெயின் 30 முதல் 40 வரையிலான கப்பல் சரக்குகளை சினோபெக் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.

இது அந்நிறுவனத்தின் மொத்தச் சுத்திகரிப்புத் திறனில் 5 முதல் 6 சதவீதமாகும். மத்திய கிழக்குப் போருக்கு முன்னர், சினோபெக் நிறுவனம் தனது மசகு எண்ணெய் தேவையில் பாதியை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே, குறிப்பாகச் சவூதி அரேபியாவிடமிருந்தே இறக்குமதி செய்து வந்தது.
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சவூதியிடமிருந்து எவ்வித மசகு எண்ணெயையும் கொள்முதல் செய்யாத இந்நிறுவனம், ஓகஸ்ட் மாதத்தில் மிகக் குறைந்த அளவிலான எண்ணெயையே இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.