சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு றீச்சா புதிய வாய்ப்பு
இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கிளிநொச்சி - இயகச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பு, கடந்த 05.08.2026 அன்று நிறைவடைந்துள்ளது.
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு பல்வேறு நடைமுறை சார்ந்த திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் திறனை வளர்க்கும் முயற்சி
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கந்தையா பாஸ்கரன், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், அவர்களின் உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைகளைப் பாராட்டியுள்ளார்.
இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள், அடுத்த தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
இது போன்று, கந்தையா பாஸ்கரன் முன்னெடுத்து வரும் இவ்வாறான திட்டங்கள், “வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உழைப்பே வழி” என்ற உண்மையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






