சவூதி அரேபியாவில் வாழ்க்கையை தொலைத்த அனோஜன் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் முக்கிய கோரிக்கை
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த கல்முனை - நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனை காரணமாக, அவரது குடும்பத்தினரும், அவர் சார்ந்த இளைஞர்களும் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேசி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளப்பதிவு
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முகநூல் பதிவொன்றுக்கு கருத்தினை வெளிப்படுத்தியபோது, இஸ்லாமிய மதத்திற்கும், நபிகள் நாயகத்திற்கு அவமதிப்பினை ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றத்திற்காக அவருக்கு, 5 வருடகால சிறைத் தண்டனைக்கும், 03 மில்லியன் ரியால் தண்டத்துக்கும் உள்வாங்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு தற்போது மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு தனிநபர் தான் சாராத மதமாக இருப்பினும், அந்த மதத்தை அவமதிப்பு செய்யக்கூடாது. அந்த மதத்தையும் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான விடயமாகும்.
எனவே, ஒரு மதத்தை - அதனது தூதரை - அவமதிப்பு செய்தார் என்பது தவறானதொரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.
பகிரங்மாக மன்னிப்பு கோரிய அனோஜன்
இருப்பினும், அவர் செய்த குற்றத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது, இந்த விடயம் அறிந்த இளைஞரின் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றென்றும் எனது நன்றி உரித்துடையது என்றார்.