மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை விதிப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் புதிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இத்தாலி பிரதமரின் “பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி” கட்சியின் இளைஞர் அணி ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாடசாலைகளில் புதிய நடைமுறை
இதன்படி, பாடசாலைகளில் முகத்தை மூடிக்கொண்டு கல்வி கற்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும், இத்தாலியில் கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின் பெயரால் எந்தவொரு பெண் பிள்ளையும் தனது முகத்தை மறைத்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் பாடசாலை அமைப்பில் விரைவாக இணைந்து கொள்வதற்காக ஒரு வகுப்பறையில் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வகுப்பறையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மொழி புரியாவிட்டால் அது சமூக ஒருங்கிணைப்பாக அமையாது மாறாகப் புறக்கணிப்பாகவே அமையும் எனக் குறிப்பிட்ட பிரதமர், தீவிர மொழிப் பிரச்சினை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களும் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இத்தாலிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 11.6 சதவீதமானோர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.