ரகித ராஜபக்சவின் வங்கி கணக்குகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிச் கணக்குகளை மூன்று மாத காலத்திற்கு முடக்கவும், அவரது வாகனங்களை பறிமுதல் செய்யவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05.11.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தடை உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவுக்குச் சாதகமான நடவடிக்கைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ரூ. 120 மில்லியனை சந்தேக நபர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், இலஞ்ச ஆணைக்குழுவானது "குற்றச் செயல் வருமானச் சட்டத்தின்" கீழ் அவர்களுடைய சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 4 வங்கிக் கணக்குகளும், இரண்டு சொகுசு கார்களும் முன்னதாக இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் முடக்கப்பட்டிருந்தன.
அத்தோடு, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் ஏறத்தாழ 40 மில்லியன் ரூபாய் இருந்ததாகவும் இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடை குறித்து ரகித ராஜபக்ஷவுக்கு வாய்மொழியாகத் தெரிவிப்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பலமுறை ராஜகிரியவில் உள்ள அவரது குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றபோதிலும், அவர் அங்கு இல்லாத காரணத்தால், அது தொடர்பான அறிவிப்பு அவரது மனைவிக்கே வழங்கப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.