நான்காவது நாளாகவும் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
"கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காவது நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் மூங்கிலாறு பகுதியில் முன்னெடுப்பு
மே 12 - மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சி இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணம் எங்கிலும் கடந்த 12ஆம் திகதிமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - பாண்டியன்குளம்
முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதைகளை எம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ' என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும்,
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்காக நினைவு அஞ்சலியும் இன்று மாந்தை கிழக்கு ஒட்டங்குளம் விநாயகபுரம் பகுதியில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது
நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் 'முள்ளிவாய்க்கால் 'கஞ்சி'
வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் - நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தத்தில் மக்கள் உணவின்றி தவிக்கும் வேளையில் அவர்கள் உட்கொண்டது சுவையூட்டிகள் எவையும் அற்ற கஞ்சி மாத்திரமே.
இதனை பிரதிபலிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் தலைமை தாங்கி கஞ்சியை வழங்கி வைத்தார்.
இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது ஒரு சுடர் ஏற்றப்பட்டு ஒரு நபராக வணக்கமும் உயிர் நீத்தவர்களுக்காக இடம்பெற்றது.
கிளிநொச்சி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி கண்ணன் கோவில் அரங்காவலர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பருத்தித்துறை முனையில் இடம் பெற்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்கரையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம் பெற்றது.
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் திரு.இருதயராசா, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.தியாகலிங்கம்,சி.பிரசாத், திரு காந்தன் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் ப.நிலாங்கதன், பருத்தித்துறை மூலக்கிளை உறுப்பினர் திரு.சாமியப்பா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் திரு.நவரத்தினம், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதே வேளை பருத்தித்துறை போலீசார் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
வவுனியா சமணங்குளம் ஜேசுபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது மக்களுக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பளை
பளை பிரதேசத்தில் இன்று (15) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பளை இளைஞர் அணியினரால் வழங்கப்பட்டது.
பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் இன்று (15) காலை 10.30மணியளவில் பளை இளைஞர் அணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி காய்ச்சி உண்டமையும்,கஞ்சிக்காக வரிசையில் நின்ற போது இராணுவத்தின் குண்டு வீச்சில் பலியானதற்குமாக நினைவு கூறும் முகமாக குறித்த உப்பு கஞ்சி பளை இளைஞர் அணியால் வழங்கப்பட்டது.
எமது மக்களின் வலிகளை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
[