இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு
இஸ்ரேல் முதன்முறையாக சோமாலியாவிலிருந்து பிரிந்து தனிநாடு கோரும் சோமாலிலாந்தை ஒரு “சுயாதீன மற்றும் சுயாட்சி கொண்ட நாடு”என்று (26-12-2025) இல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு நாடுகளிடையே முழு தூதரக உறவுகள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் அமைக்கப்படும் எனவும், தூதர் மாறுதல், மற்றும் தூதரக திறப்பு போன்ற நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தலைவர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் சோமாலிலேன்ட் தலைவர் அப்திரஹ்மான் அப்துல்லாஹி இடையில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ தொடர்பாடல் அழைப்பில் மூலமாக இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டது.
தேசிய விடுதலை போராட்டம்
சோமாலியாவிலிருந்து பிரிந்து தனி நிர்வாக முறைமையின் கீழ் இயங்கும் சோமாலிலான்ட் என்ற இஸ்லாமிய நிர்வாகப் பிரிவு ஒன்றை புதிய நாடாக இஸ்ரேல் அங்கீகரித்து இருப்பதானது இந்த சமுத்திரத்தில் ஒரு புதிய நாடு பிறந்து விட்டதை அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு தேசிய விடுதலை போராட்டங்களுக்கு ஒரு நம்பிக்கையும் தந்திருக்கிறது. அதே நேரத்தில் வல்லமை வாய்ந்த அரசுகளின் நலன்களும், தேவைகளுமே புதிய நாடுகளை உருவாக்க வல்லது. வல்ரசுகளினதோ, பிராந்திய வல்லரசுகளினதோ ஆதரவின்றி புதிய அரசுகள் பிறக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்து சமுத்திர அரசியலில் இஸ்ரேல் ஏடன் வளைகுடாவிற்கும், செங்கலிலுக்குமான ஒரு புதிய மூலோபாய முன்னணி (strategic front) அல்லது ஆடுகளத்தை திறந்துள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்தின் புவிசார் அரசியலிலும், கடல்வலுச் சமநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

ஆனால் அது இஸ்ரேலின் தனிப்பட்ட hidden / indirect, geopolitical maneuvering என இலகுவில் சொல்லி விட முடியாது. இது ஒரு முழு படைத்தளம் உருவாக்கம் அல்ல, ஆனால் தகவல் சேகரிப்பு (intelligence), கடல் கண்காணிப்பு (naval surveillance), இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத எதிர்ப்பு, கடல் கொள்ளை எதிர்ப்பு என்ற பல்பரிமாணத்தை கொண்டிருப்பதனால் இது இஸ்ரேலின் தனிப்பட்ட நகர்வு அல்ல.
அமெரிக்காவின் ஆதரவும், அனுசரனையுடனும்தான் ஏடன் வளைகுடாவில் இந்த மூலோபாய முன்னணி களம் திறக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் தத்துவார்த்த அணுகுமுறைக்கூடாக மூலோபாய செல்வாக்கு என்ற அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
இதன் நோக்கம் யாதாக இருக்குமெனில். 1. செங்கடல் பாதுகாப்பு → ஈரான்,கௌதீஸ் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு 2. கடல் வழித்தடம் (Bab el-Mandeb) கட்டுப்பாடு 3. Somalilandல் தகவல்,தொழிநுற்ப, ராணுவ ஒத்துழைப்பு 4. Horn of Africa-ல் முன்னிலை வகிப்பதும், மூலோபாய செல்வாக்கை (influence) வலுப்படுத்துவதும். 5. இஸ்லாமிய நாடுகளுக்குள் ஆதரவு சக்திகளை திரட்டுவது.
இதன் மூலம் தற்போது இஸ்ரேல் தனது அரசியல், பொருளியல், இராணுவ பலப்படுத்தலுக்காக ஏடன் வளைகுடாவில் ஒரு “மூலோபாய அடித்தளதை”(“strategic foothold”) பெற்றுள்ளது. இன்றைய உலகளாவிய அரசியலில் கடல்சார் கொள்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.
வர்த்தகம்
உலகளாவிய ஆளுகை என்பது வர்த்தகம் என்றும், வர்த்தகம் என்றால் கடல் என்றும், கடல் என்றால் கப்பல் என்றும், கப்பல் என்றால் கடல் வழிப்பாதை என்றும் நிர்ணயம் பெறுகிறது.
கடல்சார் நடவடிக்கையே பூகோள அரசியலில் செல்வாக்குச் செலுத்த வல்லதாக அமைவதனால் வல்லரசுகளும், சக்தி வாய்ந்த நாடுகளும், வல்லமை வாய்ந்த நாடுகளும் கடலை கட்டுப்படுத்தவும், கடலை தம் ஆளுகைக்கு உட்படுத்தவும், நிர்வகிக்கவும் முனைகின்றனர்.
இந்த ஆளுகை போட்டியில் இந்த வருட இறுதி ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ சொல்வழி சோமாலிலான்டுக்கான அங்கீகாரம் செங்கடல்சார் பாதுகாப்பு வலையமைப்புக்கு தர்க்கரீதியான மையம் என்பதாகும்.

உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த கடற் பிராந்தியங்களில் ஏடன் வளைகுடா அமெரிக்க ஐரோப்பாவிற்கான கடல் வழித்தடமாகவும், சக்திவள காவுகை வழித்தடமாகவும் இருப்பதனால் இந்தக் கடற் பிராந்தியத்தின் அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது.
அத்தோடு இஸ்ரேலுக்கு நெருக்கடியை கொடுக்க வல்லதும், சவால் மிகுந்த பிராந்தியமாகவும், இஸ்லாமிய உலகத்தை இரண்டு கூறாகப் பிரிக்கின்ற மூலோபாய கேந்திரத் தன்மை வாய்ந்த பிராந்தியமாகவும் இருப்பதனால், இந்த பிராந்தியத்தில் தனது பிடியை பலப்படுத்தி, நட்பு சக்திகளை உருவாக்குவது இஸ்ரேலுக்கு அவசிமானதாக உள்ளது.
இந்த அடிப்படையில்தான் சோமாலாண்டை அங்கீகரிப்பதன் மூலம் புதிய நட்பு சக்தி ஒன்றை அது உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் சோமாலிலான்ட் வரலாற்றுப் பின்னணியை நோக்குவது அவசியமானது. சோமாலிலான்ட் 1991ல் சோமாலியாவிலிருந்து பிரிந்து நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கம் வகிக்கும் எந்த ஒரு உறுப்பு நாடுகளிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரத்தையும் பெறவில்லை.
ஆனால் இப்போது இஸ்ரேல் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது. ஆனால் சர்வதேசப் பார்வையில் இந்த அங்கீகாரத்திற்கு சோமாலியா, ஆப்பிரிக்க யூனியன், அடுத்த சாதாரண நாடுகள் மற்றும் பல அரபு/இஸ்லாமிக் நாடுகள் எதிர்பாராத முறையில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அவர்கள் இதை சோமாலியாவின் இறைமை, தேசிய ஒருமைப்பாடு, மற்றும் நில அளவீட்டு சட்டத்தை மீறுவதாக கூறியுள்ளனர்.
புவியியல் முக்கியத்துவம்
இஸ்ரேல் சோமாலிலேன்ட் தனிநாடாகும் என அங்கீகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுதான். 19ம் நூற்றாண்டின் ஏழு மேற்கு ஐரோப்பிய சக்திகளால் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியின்மீது படையெடுப்புச் செய்து காலனித்துவ மயமாக்கலின்போது சேமலான்ட் பிரதேசம் பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி ஆகியவற்றால் குடியேற்றவாதத்திற்கு உட்பட்டு French Somaliland, British Somaliland, Italian Somaliland என மூன்றாக பங்குபோடப்பட்டது.
French Somaliland என காலனித்துவ காலத்தில் அழைக்கப்பட்ட பகுதியே இன்றைய ஜிபூட்டி குடியரசு ஆகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கு முனையில், உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மண்டெப் நீரிணை அருகில் அமைந்துள்ளது.
அதன் புவியியல் முக்கியத்துவம் காரணமாகவே உலகளாவிய சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது பற்றி பின்னர் பார்ப்போம். சோமாலியாவிலிருந்து பிரிந்து தனிநாடு எனக் கோரும் சோமாலிலான்ட் (Somaliland) ன் பிரிவினை கோரிக்கைக்கு உள்ள அடிப்படைகள் வரலாறு, அரசியல், சமூக, பாதுகாப்பு காரணிகள் பற்றி அறிவது அவசியமானது.
காலனித்துவ வரலாற்று அடிப்படையை நோக்கும்போது சோமாலிலான்ட் சோமாலியா இரண்டும் ஒன்றாக இருந்ததில்லை. இன்றைய சோமாலிலான்ட் பகுதி முன்பு British Somaliland என்பது பிரித்தானிய ஆட்சி உட்பட்ட காலனியத் தனிநாடு. British Somaliland இன்றைய சோமாலிலான்ட் 176,120 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை கொண்டது.
இதன் கடற்கரை நீளம் 850 கிலோமீட்டர்கள். அன்றைய பிரிட்டிஷ் சோமாலிலான்ட் நிலப்பரப்பு தான் இன்று 4.5 மில்லியன் மக்களைக் கொண்ட புதிய நாடாக இஸ்ரேலால் அறிவிக்கப்பட்டிருக்கிறதுஇன்றைய சோமாலியா இத்தாலிய குடியேற்றத்துக்கு உட்பட்ட Italian Somaliland என அழைக்கப்பட்டது.
இது மத்திய + தெற்கு Somalia, மற்றும் Puntland சுய ஆட்சி பிரதேசம் உட்பட 496,200 km² பரப்பளவையும், இந்து சமுத்திரத்தின் 2,500 கிலோமீட்டர் நீளமான கடற்கரையையும் கொண்டிருந்தது. இன்றைய சோமாலியா (Puntland சுயாட்சிப் பிரதேசத்தை தவிர்த்து) சனத்தொகை மதிப்பீடு சுமார் 17 முதல் 18 மில்லியன் என கூறப்புடுகிறது.இந்த பிராந்தியத்தின் சனத்தொகை கணிப்பீட்டை செய்வதும் மிகக் கடினமானது.
நீண்ட கடற்கரை
எனினும் இந்த எண்ணிக்கை உள்ளூர் நிர்வாக மதிப்பீடுகள், மற்றும் UN / humanitarian agencies கணக்குகள், குடியேற்றம், இடம்பெயர்வு தரவுகள் என்பவற்றின் அடிப்படையில் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளின் விடுதலை சகாப்தத்தில் பிரித்தானியரிடமிருந்து British Somaliland 1960ல் ஜூன்26ல் தனிநாடாக சுதந்திரம் அடைந்தது.
அதனை அடுத்து இத்தாலியிடமிருந்து Italian Somaliland 1960 ஜூலை 01ல் சுதந்திரம் அடைந்த போது அதே நாளில் British Somaliland மற்றும் Italian Somaliland இரண்டும் விருப்ப அடிப்படையில் ஒன்றிணைந்து “Somalia” உருவானது. ஒன்றிணைவுக்குப் பின் 1960 உருவான Somalia 637,000 km² நிலப்பரப்பையும் 3,350 km நீளமான ஆப்பிரிக்காவின் நீண்ட கடற்கரையை கொண்ட நாடாகவும் உருவெடுத்தது.

அதேவேளை இன்றைய சோமாலிலேன்ட் ஏற்கனவே ஐந்து நாட்கள் தனி நாடாக இயங்கிய அனுபவத்தை கொண்டுள்ளது என்பதையும் கருதிக் கொள்க. இந்த ஒன்றிணைவை ஆரம்பத்தில் வடக்கு சோமலான்ட் ராணுவ அதிகாரிகள் விரும்பவில்லை. ஒன்றிணைந்த ஒரு ஆண்டுக்குள்1961 ல் British Somaliland பகுதியைச் சேர்ந்த சில இராணுவ அதிகாரிகள் ஒன்றிணைவிலிருந்து பிரித்து சோமாலிலான்ட்டை மீட்டெடுக்க முயன்று புரட்சி தோல்வியடைந்தது.
இது ஒன்றிணைப்பு தொடக்கத்திலேயே வடக்கில் அதிருப்தி இருந்தது என்பதை புலப்படுத்துகிறது. 1961-இல் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. அரசியலமைப்பு (Constitution) மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. அந்த அரசியலமைப்பிற்காக நடந்தப்பட்ட வாக்கெடுப்பில் தெற்கு Somaliaவில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. அதே நேரம் சோமாலிலேன்ட் (வடக்கு) பகுதியில் பெரும்பான்மை எதிர்ப்பு கிடைத்தது.
ஆயினும் சோமாலிலேன்ட் மக்கள் எதிர்ப்பு இருந்தும் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டது. இதனை சோமாலிலேன்ட் “மக்களின் சம்மதம் இல்லாத ஒன்றிணைப்பு” எனக் கருதப்பட்டது. இந்த ஒன்றிணைவு நீண்ட காலத்துக்கு ஒத்துப் போகவில்லை.
பொருளாதார வளங்கள்
இதனால் உள்ளூர் குழப்பங்கள் தொடர்ந்தன. “1960ல் செய்த ஒன்றிணைப்பு நியாயமானதாகவும் சமமானதாகவும் இல்லை”என்றும் அரசியல் அதிகாரம் தெற்கில் (மொகதீஷு) குவிந்திருந்தமையால் பொருளாதார வளங்கள் சமமாக பகிரப்படவில்லை என்றும். முக்கிய அமைச்சுகள், இராணுவ தலைமை, நிர்வாக அதிகாரம் பெரும்பாலும் Italian Somaliland பகுதி மக்களிடம் சென்றது.
சோமாலிலான்ட் அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டனர், முடிவெடுப்பில் குறைந்த பங்கு இதனால் “சம பங்காளித்தன்மை இல்லை” என்ற குற்றச்சாட்டு மேலோங்கியது. சோமாலிலான்ட் மக்கள் புறக்கணிக்கப்பட்டதான உணர்வே ஒன்றிணைப்பு தோல்வியடைந்தமைக்கான முக்கிய வாதமாக சோமாலிலேன்டின் பிரிவினை தரப்பினரால் முன் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சோமாலியாவின் ஆட்சியாளரான சியாத் பாரே ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள், 1980-களில் நடந்த மனித உரிமை மீறல்கள், அதிபர் Siad Barre ஆட்சியில் சோமாலிலான்டின் முக்கிய நகரங்களான Hargeisa, Burao நீதி மேற்கொள்ளப்பட்ட விமானத் குண்டுவீச்சுகள், தாக்குதல்கள் காரணமாக சுமார் 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்படப்படுகிறது.

இதனை "சோமாலிலான்டின் இனப்படுகொலை “Somaliland Genocide” என அழைக்கிறார்கள். இந்நிகழ்வுகளினால் “ஒரே நாட்டில் பாதுகாப்பில்லை” என்ற எண்ணம் உறுதியடைந்தது. 1991ல் சியாத் பாரே ஆட்சி வீழ்ச்சி அடைந்தமை, சோமாலியா முழுவதும் உள்நாட்டுப் போர், அரச நிர்வாக வீழ்ச்சி என்பவற்றினால் சோமாலியா நாடு முற்றாக வீழ்ந்தபோது சோமாலிலேன்ட்“1960-க்கு முந்தைய எல்லைகளுடன் மீண்டும் தனிநாடு” என்று பிரகடனம் செய்தார்கள்.
இந்த அறிவிப்பை அவர்கள் “பிரிவு”(secession) என்று அல்லாமல் “மீள்பெறல்”(restoration of sovereignty) என்றே வாதிடுகிறார்கள். தனி அரசு, தனி நடைமுறை சுயாட்சி 1991 முதல் இன்று வரை தொடர்கிறது.
சோமாலிலான்டின் தனி அரசியல் அமைப்பு, தனி நாடாளுமன்றம், ஜனாதிபதி, நீதித்துறை, காவல் மற்றும் பாதுகாப்புப் படைகள், சொந்த நாணயம் (Somaliland shilling) போன்ற அனைத்து அரச கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வாகத்தை நடத்துவதோடு ஒழுங்கு முறையில் பலமுறை ஜனநாயக தேர்தல்களை நடத்தி ஒரு சீரான அரசை இயந்திரத்தை இயக்குகிறார்கள்.
சோமாலியா உடன் ஒப்பிடுகையில் சோமாலிலேன்ட் கடந்த 34 ஆண்டுகளாக உலக அங்கீகாரம் எதனையும் பெறாமல், அதே நேரத்தில் தனித்துவமானதாக தனியான நிர்வாக ஒழுங்கமைப்பை உருவாக்கி சிறப்பான நிர்வாகம், அமைதி,நிலையான அரசு கட்டுமானம் என்பன உயர்நிலையில் உள்ளது.
2001ல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் (Referendum) பெரும்பான்மையான மக்கள் "தனிநாடு வேண்டும்" என்றே வாக்களித்தனர்.
ஏடன் வளைகுடா
அதே நேரத்தில் சோமாலிலேன்ட் நிர்வாகம் சர்வதேச சட்ட அடிப்படையில் "ஆப்பிரிக்காவில் எல்லைகள் காலனித்துவ கால எல்லைகளின் அடிப்படையில் மதிக்கப்பட வேண்டும்" என்ற அந்தக் கோட்பாட்டுக்கு தங்களது கோரிக்கை எதிரானதல்ல என்றும், ஏற்கனவே இருந்த ஒரு நாட்டை நாம் மீட்டெடுத்துள்ளோம் என்பதுமே அவர்களது வாதமாகும்.
சோமாலேண்ட் பிரிவினையை தொடர்ந்து1991ல் Somalia மத்திய அரசு முறிந்தது, உள்நாட்டு போர், குழப்ப நிலை தோன்றியபோது 1998 பிற்பகுதியில் Puntland எனப்படும் ஒரு பிரதேசம் -Somalia-வின் ஒரு சுய ஆட்சிப் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. இது பிரிவினைக்கான தனிநாடு அல்ல. Somalia-வின் ஒன்றுமையை ஏற்கிறது.
ஏன் Puntland உருவானது? என்பதற்கு“நாடு மீண்டும் நிலைபெறும் வரை நாம் நம்மை நாமே ஆண்டு கொள்வோம்” என்பதே அவர்களது தத்துவமாகிறது. இந்த Puntland ஏடன் வளைகுடாக்கடல் மற்றும் இந்து சமுத்திர கரையோர 1,500 km நீளமான கடற்கரையையும் 212,500 km² பரப்பளவையும் கொண்டது.

அதன் மக்கள் தொகை – மதிப்பீடு சுமார் 4 முதல் 5 மில்லியன் Puntland சுயாட்சிப் பிரதேசம் தனியாகவே இயங்குகிறது. இந்த சுயாட்சிப் பிரதேசம் சோமாலேண்ட் பிரிவினையை முழுமையாக எதிர்க்கிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு குறிப்பாக குலமுறமை சமூகமாக வாழ்வதனால் Puntland உரித்துடைய குலக்குழுக்கள் ங்கள் சோமாலேண்ட் எல்லைக்குள் வாழ்வதனால் இவர்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினை தீவிரமாக எழுந்துள்ளது.
Somalia ஒன்றாக இருக்க வேண்டும், ஆனால் அது செயல்படும் வரை நாம் தன்னாட்சியுடன் இருக்க வேண்டும்” என்பதே Puntland-ன் அடிப்படை தத்துவம் ஆகும். சோமாலியா தெற்கு, Puntland, சோமாலிலான்ட் என மூன்று பிரிவுகளாக பிரிந்திருக்கும் நிலையில் சுயாட்சி கோரிய சோமாலிலாண்ட் தனியாகப் பிரிந்து கடந்த 34 ஆண்டுகளாக தனியான நிர்வாக அலகாக இயங்கி வருகின்ற போதிலும் ஏன் எந்த ஒரு நாடும் சோமாலிலேன்ட் அங்கீகரிக்கவில்லை என்பது கவனத்திற்குரியது.
இதற்கான காரணங்கள் பல. ஆப்பிரிக்க யூனியன் சோமாலிலேன்ட்“பிரிவினை ஏனைய ஆபிரிக்க நாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது” என்ற பயம் ஒருபுறமும் மறுபுறம் சோமாலியாவின் நிலஅகலம் பாதிக்கப்படும் என்ற அரசியல் கவலையும், ஆப்பிரிக்க நாடுகளினதும்பிராந்தியங்களினதும் ஒருமைப்பாடு நிலையற்ற நிலை இருப்பதுவும் ஆபிரிக்க நாடுகள் அங்கீகரிக்காமைக்கான காரணங்களாக உள்ளது.
இப்போது இருக்கும் நிலையில் வளைகுடா பகுதியில் அமெரிக்க, சீன, இந்திய, பிரித்தானிய கடற்படைகள் நிலை கொண்டுள்ளன. அதே நேரத்தில் சோமாலான்டின் எல்லைப் புரமாண ஜிபுட்டியில் சீனப் படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரவேலுக்கு அடுத்ததாக புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியல் நலங்களுக்காகவும், வல்லரசுகளின் தேசிய நலங்களுக்காகவும் சோமாலிலாந்தை சக்தி வாய்ந்த நாடுகள் அங்கீகரிக்குமா என பலரும் எதிர்பார்க்கக்கூடும்.
ஆனால் நிச்சயமாக தற்போதைய நிலையில் அமெரிக்காவோ, சீனாவோ, இந்தியாவோ சோமலான்டை அங்கீகரிக்கப் போவதில்லை. இவற்றிற்கான புவிசார் அரசியல் காரண காரியங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 06 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam