இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம்: மின் தடை ஏற்படலாம் - கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (08.01.2026) தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதால் மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அறிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு
வளிமண்டல திணைக்கள எதிர்வுகூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதி வரையில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன், 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது. பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.