மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுக்கு இரங்கல்
மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில், "சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் நேற்று காலமானார்.
திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி வந்தார்.
பூதவுடல் நல்லடக்கம்
ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன், தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.
தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில் தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்." - என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.