ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!
ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஜூன் 26ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் இராணுவம் நிர்ணயித்த பாதைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.

ஈரானின் Mehr செய்தி நிறுவனம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.
இராணுவ எச்சரிக்கை
இதற்கிடையில், ஜூலை 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்து, அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் அனுமதியற்ற பாதையை பயன்படுத்த முயன்றதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர்களை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்திருந்தது.

அதில், ஒரு டாங்கர் வெடிகுண்டில் சிக்கி தீப்பற்றியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு கப்பல்களும் திரும்பிச் சென்றதாகவும் IRGC தெரிவித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலும் இதேபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
மேலும், ஜூலை 14ஆம் திகதி, இராணுவ எச்சரிக்கையைப் புறக்கணித்து, தங்களது வழிகாட்டி (Navigation) அமைப்புகளை அணைத்துவிட்டு, கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் டாங்கர்களை IRGC தாக்கி செயலிழக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.