திணைக்களங்களின் கீழ் உள்ள காணிகள் ஒருபோதும் விடுவிக்கப்பட மாட்டாது: செல்வம் அடைக்கலநாதன்
வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களுக்குள் இருக்கும் காணிகள் ஒருக்காலும் விடுவிக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றைய தினம் (01.10.2026) நடைபெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேற்குறித்த திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலையான முடிவுகள்
மேலும் கூறுகையில், குறித்த திணைக்களங்கள் எங்களுக்கு ஒரு கதையினையும், ஜனாதிபதிக்கு ஒரு கதையினையும் சொல்கின்றார்கள். குறித்த திணைக்களங்கள் எங்களுக்கு காட்டுவது ஒரு தரவும், ஜனாதிபதிக்கு காட்டுவது ஒரு தரவுமாக இருக்கின்றது. இதனால் அரசாங்கம் நிலையான முடிவுகளை எடுக்கமுடியாமல் இருக்கின்றது.

நான் சொல்வது என்று எழுதி வையுங்கள் எதிர்வரும் எந்தகாலத்திலும் குறித்த மூன்று திணைக்களங்களின் கீழ் உள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு என்பது கடைசிவரைக்கும் நடக்காது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதனின் கருத்தினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நூறுவீதம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் அங்கு பொய்யான தகவல்களையே குறித்த திணைக்களத்தினர் சொன்னார்கள் என்று தெரிவித்தார்
மகாவலி கே வலயத்தினை தொடங்குவதற்காக நடவடிக்கை

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவிக்கும் போது, மகாவலி கே வலயத்திற்கு என்று கடந்த கிழமை 15000 ஏக்கர் காட்டினை வனவளத்திணைக்களம் விடுவித்துள்ளது. பெரியமடு வனத்தில் இந்த 15000 ஏக்கர் காட்டினை விடுவித்து மகாவலி கே வலயத்தினை தொடங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
ஆனால் மக்களுக்கு 1964ஆம் ஆண்டு கொடுத்த சட்டச்சிக்கல் நடைமுறை சிக்கல்கள் வேறு முல்லைத்தீவு மாவட்டத்தினை பற்றி கதைக்கும் போது போர் நடைபெற்ற இடம் மனிதபிமானத்துடன் நடைமுறை சாத்தியத்துடன் கதைக்கவேண்டும். மகாவலி கே வலயம் தொடங்குவதற்கு காட்டினை விடுவிக்க தயாராக இருக்கும் வனவளத்திணைக்களம். இதனை பற்றி அபிவிருத்திக்குழு தலைவருக்கு தெரியுமோ தெரியவில்லை.

ஏன் என்றால் ஒருதருக்கும் தெரியாமல் ஒளித்துத்தான் கூட்டங்கள் நடக்கின்றன. இந்த வனவளத்திணைக்களம் ஒரு எல்.ஈ போமிட் இருக்கின்ற இரண்டு ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை ஏழை விவசாயிக்கு கொடுப்பதற்கு ஆயிரத்தெட்டு நடைமுறைகளை பற்றி சொல்கின்றார்கள்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொறிமுறை இருந்தாலும் ஒரு பொறிமுறையும் இல்லை. அந்த பொறிமுறை சரியாக இருந்தால் நீதிமன்றத்திற்கு போகவேண்டிய தேவை. இல்லை இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் நபர் பத்து ஏக்கர் காணியினை பிடித்து வைத்திருப்பாராக இருந்தால் அதனை அரச திணைக்கள அதிகாரிகள்தான் கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
