காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்
காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்களையும் அவர்கள் சென்ற படகையும் கண்டறிவதற்காக நேற்று(28.10.2026) இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், இதுவரை காணாமல் போன கடற்றொழிலாளர்களோ அல்லது அவர்கள் சென்ற படகோ கண்டறியப்படவில்லை.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை
அர்னாப் சூறாவளியின் போது நிலவிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல் நாடுகளின் கடற்பரப்புகளுக்குச் சென்றிருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறையும் நிராகரிக்க முடியாதுள்ளது.

எனவே, காணாமல் போன கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகு தொடர்பான தகவல்களை இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட தொடர்புடைய அயல் நாடுகளின் அதிகாரிகளுக்கு அறிவித்து, சர்வதேச ரீதியிலான தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காணாமல் போன கடற்றொழிலாளர்களை கண்டறிவதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலுக்குச் சென்ற 3 கடற்றொழிலாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று முந்தினம்(26.10.2026) அன்று காலை 07.00 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி காணாமல் போன கடற்றொழிலாளர்களைத் தேடிச்செல்லும் மீனவர் அணியினருக்காக பாதுகாப்புச் சட்டைகளையும் (safety jacket) பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரதிக தகவல் - ஷான்
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்



