ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
பிரபல பாதாள உலகக்குழு தலைவர் ஷிரான் பாஷிக்கிற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாஷிக்கிற்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 இலட்சம் ரூபா இலஞ்சம்
சந்தேகநபரான கான்ஸ்டபிள், ஷிரான் பாஷிக்கிற்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொரல்லை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து இந்த பணத்தை அவர் பெற்றதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 25,000 ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் இலஞ்சமாக பெற்ற 195,000 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அலைபேசிகளும் வழக்கு சான்றப்பொருட்களும் கைப்பற்றல்
சந்தேகநபரிடமிருந்த மூன்று அலைபேசிகளும் வழக்கு சான்றப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கொன்ஸ்டபிள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் ஆலோசனையின் பேரில் அந்தப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்