தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 90 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளை இந்திய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைவிட்டுவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.
வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குப் பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே சுங்கத்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சோதனைக்காக நிறுத்தாமல் சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, பிரப்பன்வலசை அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பனந்தோப்புக்குள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து வாகனத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் மூட்டை மூட்டையாகப் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, வாகனத்துடன் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்ட எடை பரிசோதனையில், சுமார் 245 கிலோ தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தப்பியோடிய நபரை அடையாளம் காண்பதற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு சுங்கத்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.