வழக்கு விசாரிக்கப்பட்ட நாட்களை விட ஒத்திவைக்கப்பட்ட நாட்கள் அதிகம் – சந்தியா எக்னெலிகொட
தமது கணவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்ட நாட்களை விடவும் ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள் அதிகம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
மூவர் அடங்கிய விசேட நீதிபதிகள் குழாமின் நீதிபதி சுஜிவ நிஸ்ஸங்க வழக்கை ஒத்தி வைப்பது குறித்து அறிவித்திருந்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் ராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிரிதலே ராணுவ முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன உள்ளிட்ட ராணுவ புலனாய்வு பிரிவின் 9 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் இரண்டு நீதிபதிகளுக்கு வெற்றிடம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் குழாமின் நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாலும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாலும் இந்த குழாமினால் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16 ஆண்டுகளாக தனது கணவரின் கொலைக்கு நியாயம் பெற்றுக் கொள்வதற்காக போராடி வருவதாக சந்தியா எக்னெலிகொடதெரிவித்துள்ளார்.
நீதிபதி குழாமில் காணப்படும் வெற்றிடங்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்களில் வழக்கு விசாரணை செய்யப்பட்ட நாட்களை விடவும் ஒத்திவைக்கப்பட்ட நாட்கள் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக ஆர்வம் காட்டப்படும் வழக்கு விசாரணைகளில் ஒன்றான இந்த வழக்கினை துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இவ்வாறு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே தனதும் தனது பிள்ளைகளினதும் ஒரே எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        