வாக்குகளை வாங்கினார்கள்… வாக்குறுதிகளை மறந்தார்கள்! சஜித் சரமாரி கேள்வி
தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின்போது, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமைகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பணியையும் செய்யவில்லை எனவும், இந்த இரண்டு ஆண்டுகளும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட காலமாகவே அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில் துறைமுகம், திருக்கோவில் மற்றும் கதிரவெளி பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில், பனங்காடு மற்றும் நாவிதன்வெளி வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ
கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு உதவிகள் கிடைக்கத் தயாராக இருந்தும் அந்தத் திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலையில் முன்னர் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில், தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மல்வத்து ஓயா திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிலம், இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான முறையான பொறிமுறையையும் அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரும் பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனை கருத்திற்கொண்டு இனியாவது அரசாங்கம் இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.