பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து: அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம், நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சாகர காரியவசத்தின் இந்த கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துததெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள்
அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாது. அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில் மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.

தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள் காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் சந்தேகம் வெளியிட்டார்.
விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.