உக்ரைனில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம்: மீண்டும் தாயகம் திரும்பிய குழந்தைகள்
போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளில் 31 குழந்தைகள் மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளதாக சேவ் உக்ரைன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யர்களால் கடத்தப்பட்ட குழந்தைகள் இறுதியாக தங்கள் உறவினர்களுடன் எல்லையைத் தாண்டி இப்போது பாதுகாப்பாக தங்கள் பெற்றோர்,குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்‘‘ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் குழந்தைகள்
நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் பெற்றோர்கள், உறவினர்களை காணும் குழந்தைகள் அவர்களை கட்டியணைந்து கண்ணீர் சிந்தும் காணொளிகள் பார்ப்பவர்களுக்கு மிகவும் மன நெகிழ்வை ஏற்படுத்துவதாக அமைகிறது.
இக் காணொளிகளை சேவ் உக்ரைன் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது.
இதனை மறுத்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக கூறியது. இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகாததால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செயலி
இந்நிலையில், போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்' என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போரின் போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 31 குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.
மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என சேவ் உக்ரைன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.