ரஷ்யாவின் கெடுபிடியான தாக்குதல் - வெளியேறும் மக்களை தடுக்கும் ரஷ்ய படையினர்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன் பதினேழாவது நாளை எட்டியுள்ள நிலையில், மேரியோபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்யப் படையினர் தடுத்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்களின் வெளியேற்றத்துக்காகத் தலைநகர் கீயவ், கார்ஹிவ், மேரியோபோல் போன்ற நகரங்களில் சில மணி நேரத்துக்குச் சண்டை நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நகரங்களில் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் தலைநகர் கிவ்வுக்குள் ரஷ்யப் படையினர் நுழைந்தபோதிலும், அங்கு அவர்கள் ஆரம்ப நாட்களில் நடத்தியது போன்ற தாக்குதலை மேற்கொள்ளவில்லை.
இருந்தாலும் தற்போதைய நடவடிக்கையாக ரஷ்யப் படையினர் மேரியோபோலில் உள்ள வணிக வளாகம் மற்றும் மகப்பேறு மருத்துவமனையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் மேரியோபோலில் 1,500ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் உறைய வைக்கும் பனியில் வாடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவிக்கையில்,
மக்கள் வெளியேறாமல் தடுக்கும் வகையில் நகரிலேயே அவர்களைச் சிக்க வைத்ததற்காகவும் அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைப் படையினர் அனுமதிக்க மறுத்ததற்காகவும், ரஷ்யப் பீரங்கிகளின் தொடர்ச்சியான தாக்குதலால் சமீபத்திய நாட்களில், முக்கிய நான்கு நகரங்களிலிருந்து குறைந்தளவிலேயே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.