அமெரிக்கத் தொழில்நுட்பங்களில் 'கில் ஸ்விட்ச்' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தூதுவர்களுக்கு ரூபியோ உத்தரவு!
அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் 'கில் ஸ்விட்ச்' (Kill Switch) வசதி இருப்பதாக வெளியாகும் தகவல்களை மறுக்குமாறு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாதிரிகளுக்கான வெளிநாட்டுப் பயன்பாட்டு அணுகலை அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை செய்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த பலத்த எதிர்ப்புகளையும் கவலைகளையும் தணிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தத் தூதரக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கில் ஸ்விட்ச்' பேச்சு
அமெரிக்க அரசு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய வழிகாட்டுதலில், அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக விற்பனை செய்யவும், பிற நாடுகள் சொந்தமாக "ஏஐ இறையாண்மை" அல்லது "டிஜிட்டல் இறையாண்மை" என்ற பெயரில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பாதுகாப்பு காரணங்களுக்காக 30 நாட்கள் சோதனைக்குட்படுத்துவது என்பது 'கில் ஸ்விட்ச்' அல்லது அரசின் 'மாய பொத்தான்' (Magic button) கிடையாது என்றும், அமெரிக்க கொள்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் தூதுவர்கள் வாயிலாக அமெரிக்கா தெளிவுபடுத்த முயல்கிறது.
இருப்பினும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப அணுகலைத் துண்டித்துவிடும் என்ற அச்சம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆசிய நாடுகளும் அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, சொந்தமாகத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி பிற நாடுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதே, இத்தகைய நம்பிக்கையின்மைக்கு முக்கியக் காரணம் என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.