வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்லைன் டேட்டிங் (Dating Apps) செயலிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பையோ அல்லது காதல் உறவுகளையோ ஏற்படுத்திக் கொள்ளும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் காதல் அல்லது திருமண வாக்குறுதிகளை அளித்து நம்பிக்கையை சம்பாதிக்கும் மோசடியாளர்கள், பாலியல் சேவைகள் அல்லது தோழமை வழங்குவதாகக் கூறி குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வற்புறுத்துகின்றனர்.
கொள்ளையடிக்கப்படும் பணம்
டேட்டிங் செயலிகள் என்ற போர்வையில் தீங்கிழைக்கும் மென்பொருள்களைக் கொண்ட போலி 'APK கோப்புகளை' (Android Application Packages) நிறுவச் செய்து, வங்கி கணக்கு விபரங்கள், பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடி பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.

இந்தநிலையில், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் செயலிகள் அல்லது இணைப்புகளைப் (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
அத்துடன் வங்கி கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அந்நியர்களுடன் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.