அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடலில் அதிகரிக்கும் கடல் கொந்தளிப்பு - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் தங்களின் படகுகளுடன், அங்கிருந்து வெளியேறுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய வானிலை அறிவித்தலின் அடிப்படையில், நாட்டின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள வானிலை நிலைமை தொடர்பில் நேற்று(21.09.2026) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம், படிப்படியாக வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகர்ந்து, இந்தியத் தரைப்பரப்பை அடையும் நிலை காணப்படுவதாகவும், இதன் தாக்கம் முழுமையாகத் தணிவடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதனையடுத்து, அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, குறித்த பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறி கரையை நோக்கியோ அல்லது வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்திலிருந்து விரைவாக விலகிச் செல்வதற்காக இலங்கையை நோக்கி (தெற்கு திசையில்) பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
எனினும், குறித்த பிரதேசத்தில் இன்னும் சில மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தொடர்ந்தும் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பான கடல் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகுகளுக்கும் அதிலுள்ள பணியாளர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றார்.