பைடனை குறிவைத்து ட்ரம்ப் தீவிர பிரசாரம் - மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பு
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரங்களில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
இந்த ஆண்டில் மட்டும் 900க்கும் மேற்பட்ட தடவைகள் அவர் பைடனின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடனை இலக்கு வைக்கும் ட்ரம்ப்
நாட்டின் பொருளாதாரம், எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பைடனின் நிர்வாகமே காரணம் என ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, நாட்டின் பணவீக்கம் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு பைடனின் கொள்கைகளே பிரதான காரணம் என அவர் தனது பிரசாரக் கூட்டங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகளில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றார்.
எனினும், ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் தனது சொந்த சாதனைகளை எடுத்துக் கூறுவதை விடுத்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே அவர் இவ்வாறு பைடன் மீது பழியைப் போடுவதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
83 வயதான முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையிலும், ட்ரம்பின் பிரசாரங்களில் முதன்மை இலக்காக அவர் தொடர்ந்தும் மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.