அனோஜனுக்காக சர்வதேச தலையீட்டை கோரும் சைவநெறிக்கூடம்
சவூதி அரேபியாவில் இலங்கைக் குடிமகனான அனோஜன் சிவராசா எதிர்கொண்டுவரும் சட்டச் சூழ்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கிவரும் சைவநெறிக்கூடம், அவரது உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர் மட்டத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கிடைத்துள்ள தகவல்களைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சைவநெறிக்கூடம் தெரிவித்துள்ளது.
கோரிக்கை
அவரது உயிரைக் காப்பாற்றும் வகையில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்துவது தமது நோக்கம் அல்ல எனத் தெரிவித்துள்ள சைவநெறிக்கூடம், குறிப்பாக இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளையும் தாம் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பதையும், தனது தவறை உணர்ந்து மனம் வருந்தி வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஊடகங்கள் வாயிலாக அனோஜன் சிவராசா தனது செயலுக்காக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், தான் செய்த தவறை உணர்ந்து நேர்மையான முறையில் வாழ்க்கையைத் தொடர விரும்புவதாகவும் அறிந்துள்ளதாக சைவநெறிக்கூடம் தெரிவித்துள்ளது.
அவரது தண்டனை
பல்வேறு தரப்புகளிடம் கோரிக்கை அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பல்வேறு தரப்புகளிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக சைவநெறிக்கூடம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கான அனைத்து சட்டபூர்வமான மற்றும் நடைமுறை வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் அவரது தண்டனையை குறைப்பதற்கும், இயன்றால் அவரை விடுதலை செய்து இலங்கைக்கு திரும்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த வேண்டுகோள் எந்தவொரு அரசியல் நோக்கத்துடனும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சைவநெறிக்கூடம், ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆழமான மனிதாபிமான உணர்வின் அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபிய, இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் நடவடிக்கை மேற்கொண்டு, அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் சைவநெறிக்கூடம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் தமது நன்றியையும் ஆதரவையும் தெரிவிப்பதாகவும் சைவநெறிக்கூடம் குறிப்பிட்டுள்ளது.