ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு - 13 வயது சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்
சிறுமிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்காக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து, பொலிஸார் விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தகவல் வழங்குமாறும் பொலிஸாருக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கம் கேட்டு இந்த வழக்கை கையாண்ட பொலிஸ் ஆய்வாளர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு இரகசியமாக முறைப்பாடு ஒன்றை அளிக்கிறார்.

அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து “பென்டிரைவ்” ஒன்றை கொடுத்ததாகவும், அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் சிக்கிய தொழிலதிபர்கள்
வீடியோவில் இடம்பெற்றிருந்த முதியவர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதுடைய வீரமணி என்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், வீரமணி தேனாம் பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புக்களை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்த வீட் டுக்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு தவறான நடத்தைக்குட்படுத்தப்படுவதாகவும், மேலும் சில தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொலிஸார் நடத்திய சோதனையில், வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
இதையடுத்து வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன், பல தொழிலதிபர்களுக்கு தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வீரமணியை 3 நாட்கள் பொலிஸார் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.