கல்முனை வடக்கு மருத்துவமனையில் அடிப்படை உரிமை மீறல்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் கடமையாற்றும் 6 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2026, ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று நியமனம் பெற்ற 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களிடம், சீருடையுடன் அணிந்திருந்த தலையை மூடும் ஹிஜாப் உட்பட்ட மத ரீதியான ஆடைகளைக் கழற்றுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
அத்துடன், குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாம், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்கப்படவில்லை என்றும் இடமாற்றம் அல்லது பதவி விலகுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், 6 பெண் ஊழியர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்ட, 1989 மற்றும் 2022 பொது நிர்வாகச் சுற்றறிக்கைகள் எதிலும் அரச அதிகாரிகளின் மத ரீதியான தலை ஆடைக்குத் தடை விதிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் பிற அரச மருத்துவமனைகளில்; இத்தகைய தடைகள் இல்லை என்பதால், கல்முனை நிர்வாகத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் பாகுபாடானது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, தமது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

பரிந்துரைகள் முன்வைப்பு
இந்த நிலையில், மத சார்பான ஆடை அணிவதற்குக் கட்டுப்பாடு இன்றி எழுத்துப்பூர்வ அனுமதி வழங்குவது, பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களையும் மீண்டும் அதே மருத்துவமனையில்; பணியமர்த்துவது, அரச ஊழியர்கள் தங்கள் முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில், சீருடையுடன் மத ரீதியான ஆடைகளையும் அணிய அனுமதித்து புதிய சுற்றறிக்கையை வெளியிடுவது உள்ளிட்ட பரிந்துரைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
அத்துடன், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியமை தொடர்பான அறிக்கையை, 2026 நவம்பர் 11ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.