பாதாள உலகக்கும்பலின் சக்திவாய்ந்த நபர் கொழும்பு துறைமுக நகரில் அதிரடியாக கைது
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சீன நாட்டவர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சீனாவில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது.
சீன பாதாள உலகக்கும்பலின் தொடர்பு
சந்தேகநபரை கைது செய்தபோது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 4 போலி கடவுச்சீட்டுகளையும் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில், CCIB அதிகாரிகள் சிறப்பு விசாரணையை தொடங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சர்வதேச அளவில் செயல்படும் ஒரு சீன பாதாள உலகக்கும்பலின் சக்திவாய்ந்த உறுப்பினர் என்றும், அவர் மற்றவர்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.